Monday, July 21, 2014

ஹார்லிக்ஸ்


இந்த கதையில் வரும் சம்பவங்கள் மற்றும் கதா பாத்திரங்கள் முழுக்க முழுக்க கற்பனையே... யாரையும் குறிப்பிடுவது அல்ல...

17 ஜூலை 2014, வியாழன் மாலை 7.30 மணி 

துருவிய தேங்காயை மிக்ஸியில் போட்டு அரைக்க துவங்கியதும் வீட்டினுள் இருந்து கயலின் குரல்... . என்ன சொல்கிறாள் என்று கேட்கவில்லை.. ஆனாலும் கத்தினேன்.... 
"கொஞ்சம் இரு கயல்... நானே அங்க வந்து கேட்கிறேன்".
கயல்விழி  என் 9 வயது மகள்... கேள்வி மட்டும் அவ்ளோ கேக்குறா இந்த வயசுல... பின்ன இப்போ கேக்காம எப்போ?... 
அரைத்து முடித்ததுமே அறைக்கு சென்று என்னவென கேட்கவும், கயல் சொன்னாள்.. 
"அம்மா அம்மா.. நானும் உன்னை மாதிரி டாக்டரா ஆகணும், எனக்கு ஹார்லிக்ஸ் வாங்கி தருவியா?".. எனக்கு ஒன்றும் விளங்கவில்லைதான்... 
"என்னடி சொல்ற?"என்றதும்.. 
"நீ கொஞ்ச நேரம் முன்னாடி வந்திருந்தா டி.வில பாத்துருக்கலாம்மா.. ஹார்லிக்ஸ் குடிச்சா டாக்ட்டராக முடியும்"...
ஏதோ விளம்பரம் பார்த்திருக்கிறாள் என புரிந்தது....

26 டிசம்பர் 1984, புதன் மாலை 9.00 மணி 

கொள்.. கொள்ளென இருமியவாறேதான் வீட்டிற்குள் வந்தாள் அம்மா. வந்ததும் கையிலிருந்த பொட்டலத்தை என்னிடம் தந்து..இதை சாபிட்டுட்டு இரு நான் அஞ்சு நிமிஷத்துல சோறு வடிச்சிருறேன் என்றவாறு அடுப்பை மூட்டினாள்.. அம்மா தினக்கூலி வேலை செய்பவர்...நிரந்தரமில்லாத ஒண்ணுதான்..ஏதேனும் வேலை இருக்கும்.. ஒரு நாள் பூராம் வேலை செய்தால் 15 ரூபாய் கிடைக்கும். நானும், அம்மாவும் மட்டும் இந்த வீட்டில் இருக்கோம்.. கூரை வேய்ந்த குடிசைதான்... மழை பெய்யாத வரை எங்க வீட்டுக்குள்ள தண்ணியே வராது... குடிக்க கூட.. 

3 நாளாகவே இருமிக்கொண்டிருந்தாள்.. "ஆஸ்பத்திரி போனியம்மா?" என்றேன்...
"போனேன் மேகலை, டாக்டர் மருந்து எழுதி குடுத்தாங்க... நாளைக்கு வாங்கிட்டு வரணும்" என்று சொல்லிக்கொண்டே தட்டில் சோற்றை வைத்தாள்... 
"நீ பள்ளிக்கூடத்துல என்ன பண்ணே என கேட்டாள்".. தினமுமே கேட்ப்பாள்... 
"டெஸ்ட் வச்சாங்கம்மா..நான் 5வது தான் வந்தேன்" என கூறிவிட்டு சாப்பிட துவங்கினேன்...

"ஏன் மேகலை ஒரு மாதிரி இருக்க?", என்று கேட்டாள் கூதுகலமில்லாத பதிலால்..
"இல்லாமா, 5வதா வந்தா டாக்ட்டராக முடியாதாம்மா?" என்றேன் 
"யாருடி சொன்னா அப்படி?" எனக்கேட்டவளிடம் 
"பார்வதி... அவ எப்போதும் முதல் மார்க் வாங்குராம்மா... எப்படி இவ்ளோ நல்லா படிக்கிறே பார்வதின்னு அவட்ட கேட்டேன்ம்மா... அதுக்கு அவ ஹார்லிக்ஸ் குடிக்கிறதா சொன்னா.. ஹார்லிக்ஸ் குடிச்சா நல்ல மார்க் வருமாம்மா?.. நீ எனக்கும் வாங்கி தாயேன்".. என்று கேட்டேன்.
"அவ்ளோதானாடி,நாளைக்கே வாங்கி தர்றேன்" என்றாள் உற்சாகமாக.

அடுத்தநாள் பரபரப்பாக வீடி திரும்பி காத்திருந்தேன் அம்மாவுக்கு.. நேரம் ஒரு 9.30 இருக்கும்... கொஞ்சம் தூங்கி போயிட்டேன்...அம்மா வந்து கதவை தள்ளும்போது கேட்ட கிறீச் சத்தத்தில் முழித்தேன்... கையில் பொட்டலம் இருந்தாது... ஹார்லிக்ஸ்... என் முகத்தில் ரொம்ப மகிழ்ச்சி..நாமளும் பார்வதி மாதிரி இனி நல்ல மார்க் வாங்க முடியும் என்ற மகழ்ச்சி!... அம்மாவின் கையில் இருந்து வாங்கி அந்த பாட்டிலையே உருட்டி உருட்டி பார்த்துக்கொண்டிருந்தேன்... அதில் எழுதி இருந்த எல்லாவற்றையும் படித்தேன்..

அம்மா சாப்பிட்டவுடன் ஹார்லிக்ஸ் தருவதாய் சொன்னால்... அவள் இருமல் மருந்தை வாங்காமலே வந்திருந்தாள்.. என்னாச்சு என்று கேட்டதற்கு மருந்து கடையில் இல்லை எனவும் நாளைக்கே வருவதாகவும் கூறினாள்....
"மருந்து ஒழுங்கா சாப்பிட்டா தானேம்மா கேக்கும்.. வேற கடையில கேக்க வேண்டியதுதானே"..என்றதற்கு, 
"அதான் நீ சீக்கிரமே டாக்டராயி என்னை குணப்படுத்துவியே" என்று கூறினாள்...

வெந்நீர் காய்ச்சி அதில் இரண்டு ஸ்பூன் ஹார்லிக்ஸ் கலக்கி தந்தாள்... மிகுந்த உற்சாகத்துடன் குடித்தேன்... அவ்வளவு ஒன்றும் சுவையாக இல்லை என்றாலும் மருந்து போல கசக்கவில்லை...நான் முதலில் ஹார்லிக்ஸ் மருந்து என்றுதான் நினைத்தேன்... 
"நீயும் குடிம்மா" என்றதற்கு.. 
"அடி போடி, எனக்கு ஒன்னும் நிறைய மார்க்கு வாங்க வேண்டியதில்லை" என்றாள்.. சிரித்து கொண்டே படுத்து உறங்கினேன் 

17 ஜனவரி 1985, காலை 6 மணி 

அம்மா எழுதிருக்கவே இல்லை... நேற்று இரவு முழுவதும் அவள் இருமியது மட்டும் கேட்டது...அம்மா இறந்து விட்டதாய் சொன்னார்கள்... அன்று நடந்த வேறெதுவும் அவ்வளவாய் நினைவில் இல்லை.... அம்மா இனிமேல் இல்லை என்று மட்டும் உறுதியாய் தெரிந்தது... ஒரு வேளை அம்மாவும் ஹார்லிக்ஸ் குடிச்சிருக்கணுமோன்னு தோணுச்சி... அந்த பாட்டிலில் இருந்த கடைசி ஸ்பூன் ஹார்லிக்ஸ் எடுத்து அம்மாவுக்கு குடுக்க முயற்சி பண்ணினேன்... அம்மாதான் சாப்பிடவே இல்லை...

11 ஆகஸ்ட் 1999

இன்னிக்கு எனக்கு டாக்டர் பட்டம் குடுக்குறாங்க... ஒரே ஒரு குறை மட்டும்தான்.. அம்மாவுக்கு வைத்தியம் பாக்க முடியலையே!... அவள் இறந்த அன்னிக்கு தோணினது "ரு வேளை அம்மாவும் ஹார்லிக்ஸ் குடிச்சிருக்கணுமோன்னு".. ஆனா இப்போ தெரிஞ்சுது.. அவள் ஹார்லிக்ஸ் குடிச்சிருந்தாலும் ஒண்ணும் மாறி இருக்காது... ஒரு வேளை நான் ஹார்லிக்ஸ் வேணும்ன்னு கேக்காம இருந்திருந்தா அவ அன்னிக்கு மருந்து வாங்கிருப்பா.. ஒரு வேளை அவள் உயிரோட இருந்திருக்கலாமோன்னு...

17 ஜூலை 2014, வியாழன் மாலை 9.30 மணி 

கயலை தூங்கபோட்டுடு, யூட்யூபில் தேடினேன்... அவள் சொன்னது சரிதான் ஹார்லிக்ஸ் சாப்பிட்டா டாக்டர் ஆகலாம் என்பது போல ஒரு விளம்பரம் இருக்கவே செய்கிறது.... அவளுக்கு நாளைக்கு ஒரு கதை சொல்லணும்....

1 comment:

amas said...

very touching!

amas32